Total Pageviews

Thursday, August 15, 2013

சுதந்திரம் - சுப்பிரமணிய பாரதி


அன்று...
நாம் என்ன செய்வோம்!துணைவரே!-இந்தப்
பூமியி லில்லாத புதுமையைக் கண்டோம்.

திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு 
     
செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு; 
பலதிசையும் துஷ்டர் கூட்டங்க ளாச்சு 
     
பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு

தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார் 
     
செய்யுந் தொழில்முறை யாவையும் விட்டார் 
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார் 
     
பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார்

இன்று....
நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த 
     
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், 
அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர் 
     
அஞ்சாத பொருளில்லை அவனியிலே; 
வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த 
     
மரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்; 
துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத் 
     
துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார்.

சிப்பாயைக் கண்டு அஞ்சு வார்-ஊர்ச் 
     
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப் பார்; 
துப்பாக்கி கொண்டு ஒருவன்-வெகு 
     
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப் பார்; 
அப்பால் எவனோ செல்வான்-அவன் 
     
ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற் பார்; 
எப்போதும் கைகட்டு வார்-இவர் 
     
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப் பார்

நெஞ்சு பொறுக்கு திலையே-இதை 
     
நினைந்து நினைந்திடினும் வெறுக்கு திலையே 
கஞ்சி குடிப்பதற் கிலார்-அதன் 
     
காரணங்கள் இவையென்னும் அறிவுமி லார். 
பஞ்சமோ பஞ்சம் என்றே-நிதம் 
     
பரிதவித் தேஉயிர் துடிதுடித் தே 
துஞ்சி மடிக்கின் றாரே-இவர் 
     
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலை யே

எண்ணிலா நோயுடை யார்-இவர் 
     
எழுந்து நடப்பதற்கும் வலிமையி லார் 
கண்ணிலாக் குழந்தை கள்போல்-பிறர் 
     
காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள் வார்; 
நண்ணிய பெருங்கலை கள்-பத்து 
     
நாலாயிரங் கோடி நயந்துநின் ற 
புண்ணிய நாட்டினி லே-இவர் 
     
பொறியற்ற விலங்குகள் போலவாழ் வார்.

நாளை ...
ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா 
     
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா 
களிப டைத்த மொழியினாய் வா வா வா 
     
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா 
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா 
     
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா 
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா 

     
ஏறு போல்ந டையினாய் வா வா வா
இளைய பார தத்தினாய் வா வா வா 
     
எதிரி லாவ லத்தினாய் வா வா வா 
ஒளியி ழந்த நாட்டிலே நின்றேறும் 
     
உதய ஞாயி றொப்பவே வா வா வா 
களையி ழந்த நாட்டிலே முன்போலே 
     
களைசி றக்க வந்தனை வா வா வா 

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி

No comments: